வேலை நாட்களை அடிப்படையாகக் கொண்டே தோட்டத் துரைமார்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படுகின்ற வேலை நாட்களை அடிப்படையாகக் கொண்டு தோட்ட துரைமார்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் சம்பளம் வழங்கும் முறை

வேலை நாட்களை அடிப்படையாகக் கொண்டே தோட்டத் துரைமார்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு தோட்ட நிர்வாகத்தினால் வழங்கப்படுகின்ற வேலை நாட்களை அடிப்படையாகக் கொண்டு தோட்ட துரைமார்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் சம்பளம் வழங்கும் முறை ஒன்றை அமுல்படுத்தினாலேயே தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டொப்பந்தத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு இருபத்தைந்து நாட்களுக்கும் குறையாது வேலை வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தோட்ட நிர்வாகங்களால் மாதம் ஒன்றுக்கு 25 நாட்களுக்கும் குறைவாகவே தற்போது வேலை வழங்கப்படுகின்றன.கடந்த இரண்டு மாத காலமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும்பாலான தோட்டங்களில் பத்து நாட்களுக்கும் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளன.

இதனால் தொழிலாளர்கள் குறைந்த வேதனத்தையே பெற்றுக்கொண்டுள்ளனர்.ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் 5 நாட்களோ பத்து நாட்களோ 15 நாட்களோ வேலை வழங்கினாலும் தோட்ட துரைமார்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் அந்த மாதத்திற்குரிய முழுமையான சம்பளம் கிடைத்து விடுகின்றது.இதனால் தோட்டத் தொழிலாளருக்கு மாதமொன்றுக்கு கூடுதலான வேலை நாட்கள் வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோட்டத் துரைமார்களுக்கும் தோட்ட சேவையாளர்களுக்கும் இல்லாமல் போய்விடுகிறது.

இவ்வாறான நிலையில் மாதமொன்றுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற வேலை நாட்களை அடிப்படையாகக் கொண்டே தோட்ட துரைமார்களுக்கும் தோட்ட சேவையாளருக்கும் வேதனம் வழங்கப்படுமானால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதமொனறுக்கு 25 நாட்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இவர்களுக்கு ஏற்படும்.

எனவே இவ்விடயம் குறித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் தேசிய சங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாகவும்இதற்கு ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் சோ. ஸ்ரீதரன் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0