தேரருக்கு பதிலடி கொடுத்த செந்தில் தொண்டமான்

வரலாற்றுப் புகழ் மிக்க சிவன் ஆலயமான திருக்கோணேஸ்வரம் பௌத்த விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்ட கருத்தை செந்தில் தொண்டமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

தேரருக்கு பதிலடி கொடுத்த செந்தில் தொண்டமான்

இந்து – பௌத்த மதங்களுக்கிடையே ஒற்றுமை உண்டு என கிழக்கு மாகாணத்தில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதி செயலணியின் அங்கத்தவர் சங்கைக்குரிய எல்லாவல மோதானந்த தேரர் கூறிய கருத்து மகிழ்ச்சி அளிப்பதாகவும் திருகோணேஸ்வரம் ஆலயம் குறித்து அவர் தெரிவித்த கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உபதலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

வரலாற்றுப் புகழ் மிக்க சிவன் ஆலயமான திருக்கோணேஸ்வரம் பௌத்த விகாரையின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக எல்லாவல மேதானந்த தேரர் வெளியிட்ட கருத்தை செந்தில் தொண்டமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் வரலாறு, கலாசாரம் தொடர்பில் தவறான கருத்துகள் முன்வைக்கப்படும்போது அதனை எதிர்ப்பதற்கு நான் ஒருபோதும் தயங்குவதில்லை.

வெறும் அறிக்கைகளை மாத்திரமே வெளியிடுவதற்கு நான் எதிர்க்கட்சி அரசியல்வாதி கிடையாது. ஆளும் கட்சியில் இருந்துகொண்டே அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எப்போதும் தயாராகவே உள்ளேன்.

திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் தொடர்பில் தேரருக்குருக்கும் அவர் போன்ற கருத்துடையோருக்கும் சில விடயங்களை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணியின் செயற்பாடானது தேசிய மரபுரிமைகளைப் பாதுகாப்பதே அன்றி, சமூகத்துக்கு இடையில் குழப்பங்களைத் தோற்றுவிக்கும் வகையில் கருத்துகளை வெளியிடுவதல்ல என்பதை ஞாபகப்படுத்த விருப்புகிறேன்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை மக்களின் அங்கத்தவன் நான். அந்த வகையில் தேரருக்கு ஒரு விடயத்தைச் சொல்வதற்கு எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதேபோல அவர் சொல்லும் கருத்து தவறு என அதனை எதிர்ப்பதற்கும் எனக்கு முழு உரிமையும் உண்டு.

இந்து மதம் ஒரு புனிதமான மதம். அந்த மதத்தை பின்பற்றுவபர்கள் சமய ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள். அனைத்து மதங்களையும் சமமாக மதிப்பவர்கள்.

அவ்வாறானவர்கள் வேறு மத சின்னங்களை அழிக்கும் அளவுக்கு கீழ்த்தரமானவர்கள் அல்லர்.

தேரரின் கருத்து தொடர்பில் நான் விரிவாக ஆராய்ந்தேன். ஒருசில அரசியல்வாதிகளைப் போல தரவுகள், ஆதாரங்கள் இன்றி அறிக்கை வெளியிடுவதற்கு நான் அரசியல் ஞானமற்ற அரசியல்வாதி அல்ல.

அந்தத் தேரருக்கு தகுந்த பதில் கொடுக்க வேண்டும் என்றுதான் இது குறித்து முழுமையாக ஆராய்ந்தேன். தேரர் கருத்து வெளியிட்டது முதல், இது தொடர்பில் தொல்பொருள் ஆராய்ச்சி அமைப்புகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடினேன்.

அதனடிப்படையில் இலங்கையில் தமிழ் எழுத்துக்கள் பதிவாகிய ஆண்டு முதற்கொண்டு சிங்கள எழுத்துகள் எவ்வாறு, எப்போது பதிவாகியன என்பது தொடர்பான தகவல்களை சேகரித்துள்ளேன்.

சீகிரியாவில் தான் மிகப் பழைமையான சிங்கள இலக்கிய எழுத்துகள் காணப்படுகின்றன. அவை கி.பி. 7ஆம் நூற்றாணடைச் சேர்ந்தவை என கணிப்பிடப்படுகிறது.

ஆனால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாயுபுராணத்தில் இலங்கை, மலையதீவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அந்தத் தீவின் கிழக்கிலே அமைந்துள்ள திருக்கோணேஸ்வரம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களின் பூர்வீக வரலாறு விஜயன் வருகைக்கு முன்னர், அதாவது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய பண்பாடுகளில் இருந்து தொடங்குவதாக கட்டுக்கரை அகழ்வாய்வுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற சான்றுகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

சிங்கள மொழி உருவாக்கம் பெற்றதாகக் கருதப்படும் காலகட்டமான கி.பி. 7 ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக இலங்கை விளங்கியமைக்கான ஆதாரபூர்வமான ஆவணங்கள் உண்டு.

இதனை நான் ஆதாரத்துடனேயே குறிப்பிட்டுள்ளேன். ஜனாதிபதி செயலணி உறுப்பினரான தேரரின் தேவையற்ற, மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான இந்தக் கருத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்.

அதேபோல தேரரின் கருத்துக்கு ஆவண ரீதியாக உறுதிப்படுத்தவும் தயார், அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்கும் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0