அடிக்கல் நாட்டப்பட்ட ஹொலிரூட் மக்களுக்கான வீடுகள் எப்போது நிர்மாணிக்கப்படும்?

இவர்களின் நிலை தொடர்பில் தற்போது எந்த ஒரு அரசியல்வாதியும் கண்டுகொள்வதில்லை என்றும் பாராமுகமாகவே செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர். 

அடிக்கல் நாட்டப்பட்ட ஹொலிரூட் மக்களுக்கான வீடுகள் எப்போது நிர்மாணிக்கப்படும்?

நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் 2019ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஏற்பட்ட தீ விபத்தினால் 22 லைனரைக் கொண்டு லயன் குடியிருப்பு ஒன்று முற்றாக தீக்கிரையாக்கிய காரணமாக அங்கு வசித்து 21 குடும்பங்களைச் சேர்ந்த 105 பேர் பாதிக்கப்பட்டனர்.  

பின்னர் அவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கடுமையான முயற்சியின் பயனாக பிரதேசத்திலுள்ள கலாச்சார மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு கிராம உத்தியோகத்தரின் உதவியுடன் நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் அனர்த்த நிவாரண முகாமைத்துவ நிலையம் என பல்வேறுபட்ட நலன்புரி அமைப்புகளும் தொடர்ச்சியாக தமது உதவிகளை வழங்கி வந்திருந்தன. 

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறுபட்ட அரசியல் பிரமுகர்கள் நேரடியாக வருகை தந்து அவர்களின் நலன் தொடர்பில் விசாரித்து அறிந்தனர்.

அதுமாத்திரமன்றி அப்போதைய அரசாங்கத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி சமூக அபிவிருத்தி அமைச்சராக இருந்த பழனி திகாம்பரம், குறித்த குடும்பங்களுக்குத் தேவையான வீடுகளை நிர்மாணித்து தருவதாகவும் உறுதி அளித்திருந்தார். 

அதற்கமைய பெருந்தோட்ட கம்பெனியின் உதவியோடு தோட்ட நிர்வாகம் ஆனது குறித்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு தேவையான காணிகளை ஒதுக்கீடு செய்தன அதனை அடுத்து அக்காணி கலக்கப்பட்டு அவற்றிற்கான எல்லைகளும் ஒதுக்கப்பட்ட தோடு அமைச்சர் அவர்களின் தலைமையில் குறித்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 

ஆனால், இன்று வரை தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வீடுகள் நிர்மாணிக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த தீ விபத்து ஏற்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளிலும் 8 குடும்பங்கள் தொடர்ந்தும் கலாச்சார மண்டபத்திலும் வசித்து வருகின்றனர். 

அத்தோடு இவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலேயே தொடர்ந்து பல்வேறு அவலங்களுக்கு மத்தியில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.  இதன் காரணமாக அவர்களின் பிள்ளைகளின் கல்வி கற்பதற்கான வசதிகள் அற்றுப்போய் உள்ளதோடு மேலும் பல்வேறு சிக்கல்களுக்கு குறித்த குடும்பங்கள் ஆளாகி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இவர்களின் நிலை தொடர்பில் தற்போது எந்த ஒரு அரசியல்வாதியும் கண்டுகொள்வதில்லை என்றும் பாராமுகமாகவே செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தி வருகின்றனர். 

மேலும், தீயினால் தமது உடைமைகளை முழுமையாக இறந்த இம் மக்களின் நலன் கருதி கடந்த அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிதி மேற்கொண்டு மக்களுக்கான வீடுகளை குறித்த இடத்தில் நிர்மாணிக்க தேவையான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வினயமாக கேட்டுக் கொள்கின்றனர். 

அத்தோடு, தற்போதைய அரசாங்கத்தின் பங்காளிகளாக திகழும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைச்சர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறை எடுத்து மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒழுங்குகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்கள் குரல்

உங்கள் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர நாங்கள் தயார். விவரங்களை புகைப்படங்களுடன் அனுப்பிவையுங்கள். voice@colombotamil.lk

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0